- குரும்பசிட்டி
அசோகன் –
அகில இலங்கையில் உள்ள குக்கிராமங்களை முதன்மை அடிப்படையில் வரிசைப்படுத்தினால் அதில் குரும்ப்பசிட்டி என்ற கிராமம் முன்னிலை வகிக்கும். இக்கிராமத்தில் உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் சாதனை படைப்பவர்களாகக் காணப்படுகின்றனர். கலை, கலாச்சாரம், கல்வி, வர்த்தகம், விவசாயம், விஞ்ஞானம், அறிவியல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தவகையில் எவருமே சிந்திக்க முடியாத ஒரு விடையத்தை தனி மனிதனாக செய்து காட்டிய சாதனையாளர் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் என்றால் அதற்கு மாற்றுக் கருத்தாக எதுவும் இருக்க முடியாது. ஆம், தமிழர் வரலாற்றை ஆரம்பத்தில் ஒட்டுப் புத்தகமாக ஆரம்பித்து, இறுதியில் நுண்படச் சுருளாக்கி (மைக்கிரோ பிலிம்) நம்மிடம் விட்டுச் சென்ற பெருந்தகையாளர், உலகத்தமிழர்களின் நட்சத்திரம், ஆவண ஞானி, குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் வாழ்வியல் சாதனைகளை புரட்டிப் பார்க்க முயற்சிகின்றேன்.
ஈழகேசரி நா. பொன்னையா, திரு பொன் பரமானந்தர் ஆகியோரால் உயர்ந்த அகில இலங்கை புகழ் குரும்பசிட்டி
என்ற செல்லக் கிராமத்தில்
சாதாரண விவசாய வேளாண்மை செய்து வந்த திருவாளர் தம்பர் இராமசாமி - நல்லமுத்து
தம்பதிகளின் மூன்றாவது புதல்வனாக பிறந்தவர் திரு கனகரத்தினம் ஆவார். இவருக்கு இரு பெண் சகோதரிகளும் நான்கு ஆண் சகோதரகளும் உள்ளனர்.
தமிழர்களின் வரலாறு
திட்டமிட்டு அழிகப்படுவதை சிறுவயதில் இருந்தே பொறுக்க முடியாத இவர் அழிந்து போகும்
தமிழ் இனத்தின் கலாச்சார மற்றும் வரலாற்று பதிவுகளை ஆவணப்படுத்துவதில் தனது வாழ்நாளை
தியாகம் செய்தார். இவரது வரலாற்றுத்
திரட்டல்களை பார்வையிட்ட பல தமிழ் அறிஞர்கள் மூக்கில் விரலை வைக்குமளவிற்கு பல அரிய
தகவல்களை எமக்கு விட்டுச் சொன்றுள்ளார்.
இதில் ஒரு துளி அவரால் வெளியிடப்பட்ட `இலங்கை தமிழர்
வரலாறு` என்னும் நூலில், `கண்டி உடன்படிக்கையில்
தமிழில் கையொப்பமிட்ட சிங்கள அதிகாரிகள்` என்று பழைய பத்திரிகையில்
இருந்து ஆதாரம் காட்டுகின்றார். இன்று இலங்கைத்
தமிழர் வரலாற்றையே அழித்தொழிக்க முயலும் சிங்கள இனவாதிகள் இவற்றை வாசித்து உணர வேண்டும். மேலும் இலங்கையில் மறைந்த பிரதமர்களான ஜே. ஆர். ஜெயவர்த்தனா, சிறிமாவோ பண்டாரநாயக்கா
ஆகியோர் தமிழர் மரபு வழி வந்தோரே என
பத்திரிகை நறுக்குகளால் சான்றுகள் காட்டுகிறார். இப்படிப்பட்ட ஏராளமான அரிய தகவல்கள் அவரது சேமிப்புகளில் நிறையவே
உள்ளன.
இலங்கை கண்டியில் உள்ள
ஒரு தனியார் நிறுவனத்தில் (Estate Suppliers Co-operation LTD) ஒரு சாதாரண குமாஸ்தாவாக
தன்னை இணைத்துக் கொண்ட திரு கனகரத்தினம் அவர்கள் தனது இளம் பிராயத்தில் துடிப்புள்ள
ஒரு இளைஞனாக, தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து தீவிரமாக இயங்கினார். தந்தை செல்வநாயகம் அவர்களால் ஈர்க்கப்பட்டு இலங்கை தமிழர் வரலாற்றில்
முதல் முறையாக தமிழரசு தேசியத் திருமணத்தை நடத்திக் காட்டினார். சாதாரண திருமண சடங்குகளுக்கு அப்பாற்பட்டு தமிழ் மீது ஆணையிட்டு, தமிழ் அன்னை
மீது சத்தியமிட்டு மங்கல நாண் பூட்டி தந்தை செல்வநாயகம் முன்னால் தனது வாழ்க்கைப் பயணத்தை
ஆரம்பித்தவர். அங்கும் இங்குமாக
சிதறிக் கிடந்த பத்திரிகைகளை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்தெடுத்து வரலாற்றுப் பக்கங்களை
உருவாக்கியவர்.
இப் பணிகளுக்கு மத்தியில்
தனது இரு பிள்ளைகளின் (புஸ்பா சாந்தகுமார், உஷா சுரேஸ்குமார்) கல்வியில் அதிக
சிரத்தை எடுத்து அவர்களை அவையத்தில் முந்தியிருக்கச் செய்ய முயற்சித்து வெற்றியும்
கண்டவர். இவ்வளவு வெற்றிகளுக்கும்
அவருக்கு ஆதரவாக அமைதியாக உழைத்தவர் இவரது இல்லாள் திருமதி பவளராணி கனகரத்தினம் என்றால்
அது மிகையாகாது. தான் உண்டு
தன் குடும்பம் உண்டு என்று இருக்கும் இந்நாளில் தனது துணைவருக்கு பக்கபலமாக ஆவணங்களை
தேடிச் சேகரித்து ஒட்டுப் புத்தகங்களை உருவாக்குவதில் வலது கரமாகச் செயற்பட்டவர். குடும்பச் சுமைகளை தானே பொறுப்பெடுத்து கண்டிக்கும் குரும்பசிட்டிக்குமாக
ஓவ்வொரு கிழமையும் ஒய்வு ஒழிச்சல் இன்றி ஓடித்திரிந்து, சிறு வர்த்தக
முயற்சிகளிலும் ஈடுபட்டு தனக்குத் தேவையான செலவினங்களை பகிர்ந்து கொண்டவர். தனது வாழ்க்கைத் துணை வரும் வரை காத்திருந்து இன் முகத்துடன் வரவேற்று
அவரது தேடல்களுக்கு ஒத்துழைப்பு நல்கி அரும்பாடு பட்டவர். அவருடைய உயர்ந்த பண்பு எல்லோருக்கும் உதாரணமாக அமையவேண்டும். அவர் உலகத்தமிழினத்தால் கெளரவிக்கப்பட வேண்டும்.
உலகத்தமிழர் பாதுகாப்புக்
கழகம் எனும் அமைப்பானது திருவாளர் கனகரத்தினத்தால் ஆரம்பிக்கப்பட்டு, பின்பு பேராசிரியர்
சாலை இளந்திரையன் அவர்களின் அறிவுறுத்தலின் பின்னர் தமிழர் பண்பாட்டு இயக்கம் என் பெயர்
மாற்றப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழராட்சி மகாநாட்டில் அங்குராப்பணம்
செய்யப்பட்டது. இதற்கு உறுதுணையாக
இருந்தவர்கள் பேராசிரியர் சு. வித்தியானந்தன் மற்றும் தனிநாயகம் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது உலக தமிழாராட்சி மகாநாட்டில் தனது வரலாற்று நூல் கண்காட்சி
மண்டபத்தில் தனது தந்தையாரை முன்நிறுத்தி, பல அறிஞர்களை
அறிமுகம் செய்வித்து `இவன் தந்தை என் நோற்றான் எனும் கொல்` என்ற சொற்களிற்கு
வரைவிலக்கணம் வகுத்தார். தான் எழுதி
வெளியிட்ட புத்தகங்களை அந்நேரம் இரண்டு ரூபாய்க்கு ஓடி ஓடி விற்ற விடா முயற்சியாளர். இந்நாளில் பல நூலாசிரியர்கள் தமது ஆக்கங்களை ஏதோ சாட்டுக்கு நூல்
அறிமுகவிழாவில் விற்றுவிட்டு பின்னர் கிடப்பில் போடுவதை விரும்பாத கனகரத்தினம் அவர்கள்
தனது ஆக்கங்களை என்ன விலை கொடுத்தாவது மக்களைச் சொன்றடையச் செய்யவேண்டும் என்ற அவாவுடையவர். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று
சாதித்துக் காட்டியவர்.
இந்தியாவிலும், மொறிசியசிலும்
நடைபெற்ற பண்பாடு மகாநாடுகளைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு கனடாவில்
நடந்த உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மகாநாட்டிற்கு அழைக்கப்பட்டார். அங்கு ஒரு பாரிய வரலாற்று நூல் கண்காட்சியும் விழா இறுதி நாளன்று
கெளரவிப்பும் சிறப்பாக நடாத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இவ் வைபவத்தில் பல பராட்டுக் குவியல்களைப்
பெற்றுக் கொண்ட குரும்பசிட்டி இரா, கனகரத்தினம் அவர்களை
கனடாவில் இயங்கும் குரும்பசிட்டி நலம்புரி சபை பராட்ட முடிவு செய்தது. அதன் பிரகாரம் ரொரன்ரே-ஸ்காபுரோவில்
இரு நாட்கள் வரலாற்று நூல் கண்காட்சியும் பாராட்டுவிழாவும் நடாத்தப்பட்டது. கார்த்திகை 2, 1996ல் நகைபெற்ற இவ்விழா ஈழத்து சிவானந்தன் அவர்களின் தலைமையில் சிறப்பாக
நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு
உறுதுணையாக நின்றவர் குரும்பசிட்டி ஜெகதீஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஆய்வுரைகளை திருவாளர்கள் வே. தங்கவேல், செ. இராசநாயகம், கனக மனேகரன்
ஆகியோர் ஆற்றியிருந்தனர். சிறப்புப் பேச்சாளர்களாக
குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கம், ஈழநாடு ஆசிரியர் பரமேஸ்வரன் மற்றும் திருமதி குமாரகுலசிங்கம் ஆகியோர்
வழங்கினர். குரும்பசிட்டி
நலன்புரி சபைத்தலைவர் திருமதி சத்தியபமா துரைசிங்கம் அவர்களால் வரவேற்புரையும் காரியதரிசி
திரு செ. அசோகமூர்த்தி அவர்களால் நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டிருந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக இதுவரை எந்தவொரு தமிழர் அமைப்புக்களும்
சிந்திக்காத பட்டமளிப்பு விழா நடைபெற்றது. குரும்பசிட்டி நலன்புரிச் சபை உபதலைவர் வைத்தியகலாநிதி திரு வைத்தியநாதன்
அவர்களால் `ஆவணஞானி` என்ற பட்டம் வழங்கப்பட்டு விழாநாயகன் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து திரு கனகரத்தினம்
அவர்கள் நோர்வேயில் கெளரவிக்கப்பட்டு பின்னர் இந்தியாவில் தங்கியிருந்தார். அங்கு இருந்த நாட்களில் பல தமிழ் அறிஞர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, இரு அரிய நூல்களையும்
இறுதி முயற்சியாக வெளியிட்டார். தனது ஆவணங்கள்
வர்த்தக நோக்கின்றி பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில்
விடாப்பிடியாக இருந்தார். இறுதியாக நோய்
வாய்ப்பட்டிருந்த காலங்களில் திரும்பவும் தனது கண்டி வீட்டிற்கு குடிபுகுந்து இறுதியில்
தமிழ் அன்னையை அரவணைத்துக் கொண்டார்.
அவரது உலகலாவிய வரலாற்று
ஆவணத் தேடுதல்களில் அவர் பட்ட கஷ்டங்கள் மற்றும் மன உளைச்சல்கள் யாவரும் அறிந்து கொள்ள
வேண்டியதொன்று. அவரது ஆவணங்கள்
எரியூட்டப்பட்டிருக்கின்றன, பறிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரது அரிய தேடுதல்களை தம்மிடம் விட்டுச் செல்லுமாறு பல தடவைகள்
பலரால் வற்புறுத்தப்பட்டுள்ளார். அப்படியிருந்தும்
தன்னுடைய முயற்சிகளுக்கு ஒரு உலகலாவிய அங்கீகாரம் கிடைக்க அல்லும் பகலும் பாடுபட்டார். தனது நுண்படச்சுருள்களை சுவிஸ்நாட்டில் பக்குவப் படுத்தி எதிர்கால
சந்ததியினரின் ஆய்வுக்கு விட்டுச்சென்றுள்ளார். அவரின் 50 வருடத்திற்கு மேற்பட்ட உழைப்பு உலகத்தமிழர்களால் பாதுகாக்கப்பட வேண்டும். அவரின் செவையினை அங்கீகரித்து அன்னாருக்கு கெளரவ கலாநிதிப் பட்டம்
வழங்கப்பட்டிருக்க வேண்டும்; உலகளாவிய சாதனையாளர்
பட்டியலில் அவர் பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும் என்பதே எமது பேரவாவாகும்.
