Tuesday, December 15, 2020

எமது ஊரின் மைந்தன் பொன். பாலகுமார்

0 comments

 -       குரும்பசிட்டி அசோகன்

அகில இலங்கையிலும், கலைகள் சங்கமிக்கும் அழகிய சிறிய கிராமம் குரும்பசிட்டி என்றால் அது மிகையாகாதுஅம்மண்ணின் இதய கீதமாகத் திகழ்ந்த குரும்பசிட்டி மக்களது பெருமதிப்புக்கும் உரிய திரு பொன் பாலகுமார் இறையடி சேர்ந்தமை எம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி இதயத்தை உறைய வைத்திருக்கின்றது.

குரும்பசிட்டி பொன் பாலகுமார்

கலைப்பேரரசு . ரி. பொன்னுத்துரை, திருமதி பாலாம்பிகை பொன்னுத்துரை அவர்களது இலக்கண புத்திரனாகிய பாலகுமார் இளமையிலேயே கலைகளில் ஆர்வமுள்ளவராகவும், பொதுச்சேவைகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தும் வரலாறு படைத்திருக்கிறார். குரும்பசிட்டியின் நற்பெயருக்கு அச்சாணியாக விளங்கிய, அகில இலங்கை புகழ் சன்மார்க்கசபையில் தன்னை இணைத்துக் கொண்டு, குரும்பசிட்டி மக்களது நம்பிக்கை நட்சத்திரமாகி, மக்களுக்கு தேவையான பல உதவிகளை எதுவித எதிபார்ப்பும் இன்றி பேர்ச்சூழல் மலிந்த காலங்களிலும் ஏனைய காலகட்டங்களிலும் கணிசமான உதவிகளை செய்து வந்துள்ளார்.


திரு பாலகுமாரும் நானும் சன்மார்க்க சபை இணைக் காரியதரிசிகளாக நியமிக்கப்பட்ட காலங்களில் அவருடன் மிகையாப் பழகும் வாய்புக் கிடைத்தது. சபை நிகழ்ச்சிகளை ஒருங்கமைத்தல், மேடையாளர்களையும் பெரியார்களையும் உபசரித்தல், நிகழ்ச்சி நிரல் தயாரித்தல், நூல் நிலைய பராமரிப்பு - இவ்வாறு பல விடையங்களில் பாலகுமாரின் பங்கு மிகையாகவே இருந்த்து. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மிக நேர்த்தியாகவும் வயதிற்கு மிஞ்சிய அனுபவத்துடனும் நிறைவேற்றுவதில் பாலகுமாருக்கு நிகர் பாலகுமார் தான். மேலும் சபை உறுபினர்களுடன் சேர்ந்த்து சிரமதானப்பணி, ஏழை எளிய மக்களுக்கு சபையின் அனுசரணையுடன் உடுபுடவை வழங்குதல், சிறுவர்களிற்கான கல்வி உபகரணங்கள் வழங்குதல், தையல் இயந்திரங்கள் வழங்குதல், போசாக்கு உணவு வழங்குதல் இப்படியாக எல்லா உதவிகளையும் ஏற்றத்தாழ்வின்றி உண்மையான தன்னார்வ உணர்வுடன் செய்துள்ளார்தானுண்டு தனது குடும்பம் உண்டு என்று வாழும் இக்காலகட்டத்தில் தனது கிராம மக்களை தனது சகோதரர்களாக பாவித்து அவர் செய்த உதவிகள் என்றும் மக்கள மனதில் அழியாத நினைவலைகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

பாலகுமாரும் நாடகத்துறையும்

மீனுக்கு நீந்தக்கற்றுக் கொடுக்க தேவையில்லை. அவ்வாறே கலைப்பேரரசு . ரி. பொன்னுத்துரையின் மகனான கலைவாரிசு பாலகுமாரும் நாடக்க் கலையில் சிறந்து விழங்கினார். தனது தந்தையாரின் பயிற்சிப் பட்டறையில் இளவயதிலேயே ஆர்வம் காட்டி பல நாடக அரங்குகளை அலங்கரித்திருகின்றார். அவர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவனாக இருந்த காலகட்டங்களில் பல நாடகப் போட்டிகளில் பங்கு பற்றியும் கல்லூரி விழாக்களில் நடித்தும் பலரது வரவேற்பைப் பெற்றிருக்கிறார். பாலகுமாரின் கம்பீரமான தேற்றம், நடிப்பாற்றல் அனைவரையும் மெய்சிலர்க்க வைக்கும். கல்லூரி நிர்வாகமே வியக்கும் அளவிற்கு நாடகக்கலையில் தனி இடம் பிடித்த பாலகுமார்,  நாடக பயிற்சிப் பட்டறைகளை அமைத்தும் சக மாணவர்களை நெறிப்படுத்தியும் அரங்கு அமைப்புகளை நிர்வகித்தும் தனது திறமையினை வெளிப்படுத்தி வெற்றியும் கண்டார். இவரது நடிப்பாற்றலால் யூனியன் கல்லூரி மாநில நாடகப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளது.

இவற்றிற்கு அப்பால் சன்மார்க்கசபை நாடக விழாக்களிலும் ஏனைய பொது அமைப்புகளிலும் நாடக நடிகனாக பங்கேற்று தன்க்கென ஒரு முத்திரை பதித்துள்ளார்.

 

பாலகுமாரும் நண்பர்களும்

நான் அறிந்த வரையில் பாலகுமாருக்கு எல்லோரும் நண்பர்களே!. வேற்றுக் கருத்துக்களை பல நண்பர்கள் கொண்டிருந்தாலும் எல்லோருடனும் நன்றாகப் பழகி வேடிக்கையான சுவாரசியமான கருதுகளைப் பரிமாறி தனது நண்பர்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பிடித்துள்ளார். உண்மையைச் சொல்ல நினைத்தால் மாற்றுகருத்துகளை கொண்டவர்கள் தான் அவரின் எணபது வீதமான நண்பர்கள் எனும் அளவிற்கு அவரது நட்பு நீண்டிருந்தது.

 

குண்டகசாலை விவசாயக் கல்லூரியில் விவசாயப் பட்டப்படிப்பை நிறைவு செய்து பின்பு வங்கித்துறையில் தன்னை இணைத்துக் கொண்டு படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்று இன்றுவரை பிராந்திய முகாமையாளராக வவுனியாவில் பணியாற்றி வந்தார். தமிழன் என்று யார் வந்தாலும் தன்னால் முடிந்த அளவு உதவிகள் செய்து அது வங்கி சார்ந்த விடையமானாலும் அல்லது தனிப்பட்ட பிரச்சனைகள் என்றாலும் அன்பாகவும் பண்பாகவும் உணர்வு பூர்வமாக உதவிகள் செய்து சக ஊழியர்களின் பாராட்டும் பெற்று ஒப்பாரும் மிக்காரும் இலாது வாழ்ந்து வந்தவர் மட்டுமல்ல மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தார்.

 

குரும்பசிட்டியும் பாலகுமாரும்

எமது ஊரில்  பாலகுமார் அவரது குடும்பத்தினரை எல்லோரும் நன்கு தெரிந்து வைத்திருந்த்தனர். எமது ஊர் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது மட்டுமன்றி குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலயம் உட்பட பல ஆலயங்களில் கிரமமாகப் பங்கு பற்றி ஆலயத் தொண்டுகள் பல செய்து தன்னை உயர்த்திக் கொணடவர். பொதுச்சேவை அமைப்புகள் பலவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் எமதூர் மக்களிற்ர்கு பல உதவிகளையும் பெற்றுக் கொடுத்தவர்.

 

பாலகுமாரும் குடும்பமும்

குரும்பசிட்டியில் மிக வளமான கல்வி அறிவுமிக்க குடும்பத்தில் பாலகுமார் செல்லப்பிள்ளையாக இருந்தவ்ர். திருமகள் புத்தக நிலைய அதிபர் திரு சபாரத்தினம், திரு இராசரத்தினம் ஆசிரியர், சமூக ஆர்வலர் சின்னத்துரை ஆகியோரின் அன்புக்கு பாத்திரமானவர். வைத்திய கலாநிதி சகிதேவி தயாபரன் இவரது ஆருயிர் தங்கைஎந்திரவியல் நிபுணர் திரு தயாபரன், திரு பிரபாகரன் ஆகியோரை தன் உறவினராக கொண்டவர். இவரது தந்தையார் . ரீ. பொன்னுத்துரை ஆசிரியர் நாடக உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர். அவ்வாறே இவரது தாயார் பாலாம்பிகை பொன்னுத்துரை குரும்பசிட்டி மக்கள் மிகவும் நேசிக்கும் ஒருவராகத் திகழ்தவர்.

 

இவற்றிக்கு அப்பால் குரும்பசிட்டி கனக செந்தினாதன், சித்திர வித்தியாகாரி தம்பித்துரை ஆசிரியர், கவிஞர் கந்தவனம் ஆசிரியர், திரு மு திருநாவுக்கரசு, திரு மு சுப்பிரமணியம் ஆசிரியர் ஆகியோராலும் ஏன் குரும்பசிட்டியை சேர்ந்த்த அனைத்து மக்களினாலும் அன்பையும் பாராட்டையும் பெற்று வளமாக வாழ்தவர்.

 

இவ்வாறு எமது மண்ணின் மைந்தனாக, வழிகாட்டியாக, சமூக ஆர்வலராக, நாடக கலைஞனாக வாழ்ந்த பாலகுமரை இறைவன் தன்னுடன் இணைத்துக் கொண்டான். அவரது பணி மேலும் சிறக்க இரு சற்புத்திரர்கள் செல்வன் சஞ்சய்குமார், செல்வன் ஜனகன் ஆகியோருடன் சேர்ந்த்து நாமும் ஈடுபடுவேமாக.  ஆறாத்துயரில் மூழ்கியிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  எமது ஆழ்ந்த மனமார்ந்த இதயபூர்வமான அனுதாபங்களை பகிர்ந்து கொள்வதோடு குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் திருவருள் கிடைக்க பிரார்த்திப்போமாக.

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.


No comments:

Post a Comment